search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்துணவை சாப்பிட்ட"

    வெம்பாக்கம் அருகே பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட 37 மாணவர்கள் வாந்தி-மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த பட்டரை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 37 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    மாணவர்கள் நேற்று பிற்பகல் சத்துணவு சாப்பிட்டனர். அப்போது உணவில் பல்லி இறந்து கிடப்பதை 5-ம் வகுப்பு மாணவி ஒருவர் பார்த்தார். இது குறித்து தலைமை ஆசிரியர் குமாரிடம் தெரிவித்தார். அவர் மாணவர்கள் யாரும் சத்துணவை சாப்பிட வேண்டாம் என்று கூறினார். அதற்குள் 36 மாணவர்களுக்கும் மயக்கம் மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, செய்யாறு அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதையறிந்த பெற்றோர், அரசு மருத்துவமனையில் திரண்டனர். அவர்கள் கூறும்போது, சத்துணவு ஊழியர்களின் கவனக் குறைவு காரணமாக பல்லி விழுந்த உணவை மாணவர்கள் சாப்பிட்டுள்ளனர். சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் வெம்பாக்கம் தாசில்தார் சுபாஷ்சுந்தர், பள்ளி துணை ஆய்வாளர் புகழேந்தி ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர். மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஆறுதல் கூறினர்.

    இந்த பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் தற்போது நடந்து வரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் சத்துணவு செய்யும் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை. நேற்று அவர்கள் தான் உணவு சமைத்துள்ளனர். இது குறித்து சத்துணவு ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×